உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி; போலி தகவல் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
38

உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படாத செய்தி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான கருத்தை வெளியிட்டதாகவும், அது தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (09) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்க உயர் பதவிகள் பற்றிய குழுவில் உள்ள எவருக்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்புச் செயலாளர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் தவறான செய்தியைப் பரப்பிய நபர்கள் மற்றும் செய்திகளை வழங்கியவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதல் இந்தியாவின் தேவைக்காக நடத்தப்பட்டதாகவும், அதன் மூளையாக செயற்பட்டது இந்தியா என செயலாளர் ரவி செனவிரத்ன குழுவில் ஒருபோதும் கூறவில்லை என்றும் கூறினார்.

இது தமது அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

மேலும் கருத்த தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,

”இந்தியாவைப் பற்றிப் பேசவே இல்லை. எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் மிகவும் தவறான செய்தியை உருவாக்கியுள்ளார். இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். எனவே இது தொடர்பாக எடுக்கக்கூடிய அதிகபட்ச சட்ட நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

ஏனென்றால் உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படும் விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க தார்மீக உரிமை இல்லை. அது தவறு. இதைப் பற்றிய புரிதல் இருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவை சட்டங்களுக்கு எதிரானவை.” என்றார்.