உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அம்பலப்படுத்திய கம்மன்பில

0
64

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்களை மறைத்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் தலைமையிலான விசாரணைக் குழு அறிக்கைகளில் இவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகள் அவர் தலைமையில் நடைபெறுவது பொருத்தம் இல்லை எனவும் கம்மன்பில் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நேற்று (21) காலை 10 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக உதய கம்மன்பில முன்னதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறு செய்தமைக்காக உடனடியாக நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இரண்டு அறிக்கைகள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுர வேண்டுமென்றே தயங்குகின்றார்.

முதல் அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை 2024 ஜூன் 25 அன்று அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் அல்லது புலனாய்வு பிரிவினரின் குறைபாடுகளைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.ஜே. டி அல்விஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அதன் அறிக்கையைக் கையளித்தது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த அறிக்கைகளை ஏன் மறைக்கின்றது?

இந்த அறிக்கையின் 43வது பக்கத்தில், சஹ்ரான் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகள் பிரபலங்கள் உட்பட பல இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ரவி செனவிரத்னவுக்கு அரச புலனாய்வு சேவையினால் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி குறித்த கடிதம் அவரது மேசைக்கு வரும்போது அவர் வெளிநாட்டிலிருந்ததாகவும் 16 ஆம் திகதியே கடிதத்தைப் பார்த்ததாகவும் அவர் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளிநாட்டிலிருந்தபோது பதில் கடமைகளைப் பிரதி பொலிஸ் மா அதிபர் நாகஹமுல்ல ஆற்றியிருந்தார். எனினும் தமக்கு வரும் இரகசிய கடிதங்களைப் பிரிக்க வேண்டாம் என ரவி செனவிரத்ன அவரிடம் கூறிச் சென்றிருந்தார்.

எனவே குண்டுதாரிகள் கொழும்பு வரும்போதும் கூட அந்த கடிதம் கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது என்று புலப்படுகிறது. சஹ்ரான் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்த ரவி செனவிரத்னவுக்கு மட்டுமே இந்த விடயத்தின் தீவிரத்தன்மையை அறிந்து செயற்பட்டிருக்க முடியும்.

குறித்த கடிதத்தின் தீவிரமின்மையை அவர் அறிந்திருந்தால் ஏப்ரல் 18 ஆம் திகதியே சஹ்ரானை கைது செய்திருக்க முடியும். அதன்படி குறித்த அறிக்கையின் 41வது பக்கத்தில் கடமையைச் சரிவர நிறைவேற்றாமை தொடர்பில் ரவி செனவிரத்னவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில் தற்போதைய அரசாங்கத்தில் அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் காவல் துறையினரால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி உயர் நீதிமன்றில் அவர் வழக்கொன்றையும் முன்னதாக தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறாயினும் நாகஹமுல்லவின் கைகளுக்கு ஒரு வாரம் எட்டாமல் இந்தக் கடிதம் ரவி செனவிரத்னவின் மேசையில் எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இரகசியமாக கருதப்படும் அறிக்கைகள் மிகவும் உணர்திறன் கொண்டவை என்பதுடன் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும் ரவி செனவிரத்னவின் சட்ட விரோதமான ஆலோசனையால் இந்தக் கடிதம் மேசையிலேயே இருந்துள்ளது. சஹ்ரான் குழுவினர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் போதும் தாக்குதலை நடத்தவுள்ளதாக காணொளி பதிவு செய்யும் போதும் கொழும்புக்கு குண்டுகளை கொண்டு செல்லும் போதும் ரவி செனவிரத்னவின் மேசையில் இந்த கடிதம் இருந்துள்ளது.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை 16ஆம் திகதி பார்வையிட்டு மே முதலாம் திகதிக்குள் விசாரணை நடத்தி முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு அவகாசம் வழங்கியுள்ளார்.

சஹ்ரான் தொடர்பான 13 புலனாய்வு அறிக்கைகள் 2019 ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 20 வரை மிகக் குறுகிய காலத்தில் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின்படி 2017 காத்தான்குடி மத மோதல், 2018 வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை, 2018 மாவனல்லை புத்தர் சிலைகள் உடைப்பு, 2019 வனத்தவில்லுவில் வெடிபொருட்கள் மீட்பு ஆகிய அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

எனவே வெடிபொருட்களை சேகரித்து வெடிகுண்டுகளை சோதனை செய்த சஹ்ரான் கும்பல் தற்கொலைத் தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறிய போது மற்றவர்களுக்கு இது புரியவில்லை என்றாலும் இவ்விடயத்தில் சிறந்து விளங்கிய ரவி செனவிரத்னவிற்கு நன்கு புரிந்திருக்கும்.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை வாசித்திருந்தால் சஹ்ரான் குழுவினரை கைது செய்திருக்க முடியும். குறைந்தது ஏப்ரல் 18ம் திகதியாவது தேடுதல் நடத்தியிருந்தால் சஹ்ரானை கைது செய்திருக்க முடியும்” என்றார்.

இந்நிலையில் ரவி செனவிரத்ன மீது குற்றவியல் அலட்சியத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இந்த விசாரணை அறிக்கையின் 41வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படியானால் ரவி செனவிரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக மாறுவார். இந்நிலையில் அவரது மேற்பார்வையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?

இந்த அறிக்கை எமக்கு கிடைக்க முன்னர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்ட போது இதில் உள்ள தவறை சுட்டிக்காட்டினோம்.

அதேநேரம் அல்விஸ் அறிக்கையின் 14ஆம் பக்கத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகரவுக்கு எதிராகவும் குற்றவியல் வழக்குகள் தொடர வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் 17 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த அறிக்கையை ஏன் ஜனாதிபதியும் அரசாங்கமும் மறைக்க முயற்சிக்கின்றனர்? இந்த அறிக்கைகளை நாம் இன்று வெளியிடவில்லை என்றால் ஜனாதிபதியால் குற்றவாளிகளை வழக்கிலிருந்து காப்பாற்ற முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று தெரிந்தும் ரவி செனவிரத்னவை அழைத்து பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை ஒப்படைத்து அவரது மேற்பார்வையில் தாக்குதல் குறித்து விசாரணையை நடத்துவது ஏன்?

ஷானி அபேசேகரவை காப்பாற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைத் தகவல்களைத் திரித்து ஒட்டுமொத்த தேசத்தையும் தவறாக வழிநடத்தும் உள்நோக்கத்துடன் இந்த நியமனம் வழங்கப்பட்டதா என்ற நியாயமான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணையில் சந்தேக நபராக மாறியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக அப்பதவியில் நீக்குமாறு உதய கம்மன்பில் வலியுறுத்தியுள்ளார்.

ரவி செனவிரத்ன அந்த பதவியில் இருக்கும் வரை பொலிஸாரிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.