உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்கள் தமக்கே சொந்தம் எனக் கூறி, சகோதரர் ஹிஜ்ஜால் ஹகமட் தாக்கல் செய்திருந்த மனுவை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் திலின கமகே, மனுவை நிராகரித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் போது கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் இப்ராஹிம் இல்ஹாம் ஹகமட் உயிரிழந்தார். அவர் தெமட்டகொட மஹாவில தோட்டத்தில் வசித்தவராகும்.
இதேவேளை, கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தவ்ஹீத் ஜமாத் தலைவர் மொஹமட் சஹாரான் மற்றும் அவரது மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, முகமது மர்சுக் அயத்துல்லாஹ், உயிரிழந்த தற்கொலைப் படைத் தீவிரவாதியான தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹாரான் ஹாஷிமின் மனைவி முகமது இல்மி ஆகியோர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான மொஹமட் மஷ்னுக் மொஹமட் ரிலா, மொஹமட் முஃபைல் மற்றும் மொஹமட் அயத்துல்லா ஆகியோர் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இச்சம்பவத்தில் முதலாம் மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் மொஹமட் சஹாரன் மற்றும் அவரது சகோதரர் மொஹமட் இல்ஹாம் ஆகியோர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட போது உயிரிழந்துள்ளந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.