ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் நேர்காணலில் பேசிய கிரஹாம், “அயதுல்லாவுக்கு நான் சொல்வது இதுதான். சிறந்த வாழ்க்கைக்காகப் போராடும் உங்கள் சொந்த மக்களையே நீங்கள் தொடர்ந்து கொன்று கொண்டிருந்தால், டொனால்ட் ட்ரம்ப் உங்களைக் கொன்றுவிடுவார்” என்று மிகக் தெரிவித்தார்.
தன் சொந்த மக்களையே கொன்று உலகை அச்சுறுத்தும் அயதுல்லா ஒரு மதவாத நாஜி ஆவார். உதவி வந்து கொண்டிருக்கிறது. உங்கள் நாட்டை அயதுல்லாவிடம் இருந்து மீட்டெடுங்கள் என்று ஈரான் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டிய கிரஹாம், ட்ரம்ப் வெறும் எச்சரிக்கையோடு நின்றுவிட மாட்டார் என்பதை ஈரான் உணர வேண்டும் என்றார்.
டாலருக்கு எதிரான ரியால் மதிப்பு குறைவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து ஈரானில் கடந்த சில வாரங்களாக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதில் இதுவரை 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் அரசு அமைதியான போராட்டக்காரர்களைக் கொன்றால், அமெரிக்கா அவர்களைக் காப்பாற்ற களமிறங்கும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவம், “அமெரிக்கா ஏதாவது தவறு செய்தால் எங்களின் பதில் மிகவும் தீர்க்கமானதாக இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளை நாங்கள் வெட்டுவோம்” என்று எச்சரித்தது.



