புடினை மிக விரைவில் சந்திக்க முடியும் – டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

0
34

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை “மிக விரைவில்” சந்திக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரை உண்மையிலேயே நிறுத்த விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“நேரம் நிர்ணயிக்கப்படவில்லை, ஆனால் மிக விரைவில் அவரை சந்திப்பேன்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரியாத்தில் வரவிருக்கும் உயர் மட்ட பேச்சு வார்த்தைகளின் எதிர்பார்ப்புகளை வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ குறைத்து மதிப்பிட முயன்ற சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகரில் ரஷ்ய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களில் ரூபியோ ஒரு உயர் மட்ட அமெரிக்க குழுவை வழிநடத்த உள்ள நிலையில் உக்ரைன் போர் அதன் மூன்றாவது ஆண்டு நிறைவை நெருங்குகின்றது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தனது குழு ரஷ்ய அதிகாரிகளுடன் “நீண்ட காலமாகவும் கடுமையாக” பேசி வருவதாகவும் கூறினார்.

இரு நாட்டு தலைவர்களும் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் என்று நான் நினைக்கிறேன்” என்று டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.