திசைகாட்டி நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருவதாகவும், வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அதிகாரத்தை பெற்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கெஸ்பேவவில் நேற்று வியாழக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் முடியும்” வெற்றிப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும். அதற்கு இன்னும் நான்கு வருடங்கள் தேவைப்படும். அதற்காகவே மக்களின் ஆணை கேட்கிறேன். மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.
இனிவரும் காலங்களில் இயலும் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவோம். புதிய முதலீடுகளை கொண்டு வருவோம். மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை வழங்குவோம்.
அநுரகுமார திசாநாயக்கவும் சஜித்தும் என்ன சொல்கிறார்கள்? அவர்கள் எம்மோடு தொடர்புபடவில்லை என்கின்றனர். எம்மை விரட்டிவிட்டு அதிகாரத்தை அவர்களிடம் தருமாறு கேட்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிப்பதால் என்ன நடக்கும்? ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும். 370 அதிகரிப்பை தாங்க முடியாத மக்களால் 420 ஐ தாங்க முடியுமா?
தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்ட இடைவௌி 400 மில்லியன் ரூபாயாகக் காணப்படுகிறது. அதனை செயற்படுத்தினால் டொலரின் பெறுமதி 470 ரூபாய் வரையில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும்.
எம்மைத் திருடர்கள் என்று சொல்பவர்கள். எதற்காக மக்களிடம் பொய் சொல்கிறார்கள்? நாம் திருடர்களை பிடிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். மோசடியால் திரட்டிய சொத்துக்களை கையகப்படுத்தக்கூடிய சட்டமூலத்தையும் தயாரித்திருக்கிறோம்.
அதிகாரத்தை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகின்றனர். வரியைக் குறைத்தால் என்ன நடக்கும் என்பதையே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பார்த்தோம். 2020 களில் நான் உண்மையை சொன்னதால் நான் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் வரவேண்டிய நிலைமை உருவாகியது.
எமது வரவு செலவு திட்ட யோசனைகளை நான் வௌியிடுகிறேன். அநுரவும் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும். இன்று என்னை விவாதத்திற்கு அழைக்கிறார். நான் விவாதத்திற்குத் தயாராகவே இருக்கிறேன். முதலில் அவர்கள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை முன்னெடுப்பார்களா அல்லது இறக்குமதியில் தங்கியிருப்பார்களா என்பதை நாட்டுக்குத் தௌிவுபடுத்த வேண்டும்.
இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் காணொளி மூலம் பகிரங்கமாக விவாதம் நடத்தவும் நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.