சேவலை கொன்ற நாய் சுட்டுக்கொலை; தவிக்கும் வாயில்லா ஜீவன்கள்

0
48

சேவல் ஒன்றை கடித்துக் கொன்ற ஒரு பெண் நாயை, கோழி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் மொனராகலை படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலிகத்தென்ன பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட வீட்டின் அருகே காணப்பட்ட பெண் நாய்க்கு, 4 குட்டிகள் உள்ள நிலையில் சேவலை அந்த நாய் பிடித்து அதைக் கொன்று குட்டிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளது.

சந்தேக நபர் சேவலை காணாமல் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கொல்லப்பட்ட சே​வல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த கூலித்தொழிலாளியான 42 வயதான நபர் வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து பெண் நாயை சுட்டுக் கொன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பெண் நாயின் உடல் படல்கும்புர கால்நடை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில் பெண் நாயின் உடலில் மூன்று சன்னங்கள் காணப்பட்டன.

நாயைக் கொன்ற நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையுல் அவரைக் கைது செய்ய படல்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.