நாளுக்கு நாள் மருத்துவ உலகில் நடக்கும் சாதனைகளை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
அந்தவகையில் இப்போது மருத்துவர்களின் திறமையாலும் மருத்துவ தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியாலும் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் 6 வயதான பிரையன்னா பாட்லி என்ற சிறுமிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அச் சிறுமியின் உடல் நலம் குறைந்து அவருக்கு பக்க வாதமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரிய வகை மூளை அழற்சி நோய்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் தான் “ராஸ்முஸ்ஸென்ஸ் என்சஃபலைட்டிஸ்” (Rasmussen’s Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் சிறுமியின் மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அச் சிறுமிக்கு வலிப்பு நோய்க்கான மருந்துகளும் ஸ்டீராய்டு மருந்துகளும் கொடுக்கப்பட்ட போதிலும் சிறுமியின் நிலையில் மாற்றம் இல்லை.
நிரந்தர தீர்வு
இந்த அரிய வகையான நோய்க்கு ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதுதான் நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதற்கமைய மருத்துவர் ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதுடன் சிறுமியும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த நோய்க்கு அழற்சி ஏற்பட்ட மூளையின் ஒரு பகுதியையே நீக்குவது தான் தீர்வாக இருந்தது.
தற்போது இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சாதனை மருத்துவ உலகின் முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.