இலங்கையில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கையில் 147,192 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்பட்டன.
அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33% ஆல் அதிகரித்து 590,260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் 101,777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
அதில் 98,124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

திணைக்கள வரலாற்றின் படி, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் 2016 இல் விநியோகிக்கப்பட்டுள்ளன.அந்த ஆண்டில் 6,58,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த ஆண்டின் ஏழு மாதங்களில் 590,260 என்பது கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமையால், 2016ஆம் வருடத்தின் சாதனை முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் 140,701 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
எனினும் 2021ஆம் ஆண்டு முழுவதும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ளனர்.
