போருக்கு மத்தியில் இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு நேரடி விமான சேவை: கொழும்பில் ஒப்பந்தம் கைச்சாத்து

0
176

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கும் இடையே கைசாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் மூலம் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அத்துடன் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போதுள்ள சேவை உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் ஏற்படும் தாமதத்தை தடுப்பது, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் எம்மிடம் குறிப்பிட்டார்.” எனவும் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலின் பல பகுதிகளில் நடத்திய ரொக்கட் தாக்குதல்களை அடுத்து இங்கு போர் மூண்டது.

சமாதானப் பேச்சுகளை நடத்த சர்வதேச நாடுகளும் ஐ.நாவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

இங்கு கடும் போர் நிலவி வந்தாலும் இலங்கையில் இருந்து அதிகளவான தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.