லண்டனில் புலிக்கொடியை காண்பித்த புலம்பெயர் தமிழர்கள்: இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்

0
127

லண்டனில் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை, இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இங்கிலாந்து சென்றிருந்தது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டின் போது கடந்த எட்டாம் திகதி ஓவல் மைதானத்தில் பிரதான வாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் மனித உரிமைகளை மேற்கோள்காட்டி இலங்கை கிரிக்கெட் அணியியை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் இலச்சினையை ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம, இங்கிலாந்து உள்துறை அலுவலகத்திடம் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீர அரசாங்கம் (Transitional Government of Tamil Eelam) விடுத்த கோரிக்கையை இந்த ஆண்டு பிரித்தானியா நிராகரித்திருந்தது.

2001ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி முதல் பயங்கரவாதச் சட்டம் 2000 (தடை செய்யப்பட்ட அமைப்புகள்) (திருத்தம்) ஆணை 2001 இன் அட்டவணை 2 இல் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.