காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் படங்களையும் காணொளிகளையும் எடுத்து எங்களை அச்சுறுத்தும் செயல்பாடானது ஜனநாயக நாடு என்று சொல்லும் இந்த இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி எழுப்பியுள்ளதாக தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, காவல்துறையினரும் வனவிலங்கு உத்தியோகத்தினரும் இணைந்து தரவை துயிலும் இல்ல நினைவு தூபியை இடித்து உழவு இயந்திரத்தில் அள்ளி சென்றுள்ளார்கள்.

உலகில் எங்கும் நடைபெறாத அராஜக செயலை இன்று வனவிலங்கு பாதுகாவலர்களும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளார்கள்.
அத்தோடு 23 ஆம் திகதி சந்திவெளி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வினை குழப்பும் விதத்தில் காவல்துறையினர் செயற்பட்டனர்.

இதனை தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், தமிழ் உறவுகள் கண்டு கொள்ளவேண்டும். இந்த செயற்பாட்டை சர்வதேச ரீதியில் தெரியப்படுத்த முன்வாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் 27 ஆம் திகதி அங்கு விளக்கினை ஏற்றுவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அனைவரும் இதில் கலந்து கொள்ள முன்வாருங்கள் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் கிரான் சந்தியில் இருந்து தரவை துயிலும் இல்லத்திற்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.