அப்பா திட்டுகிறார், கட்டுப்பாடுகள் விதிக்கிறார் அவரை கைது செய்யுங்கள்: தந்தை மீது ஐந்து வயது சிறுவன் பொலிஸாரிடம் முறைப்பாடு

0
79

இந்தியா, மத்தியப் பிரதேசம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயதான ஹசானைன் எனும் சிறுவன், தனது தந்தை மீது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தனியாக பொலிஸ் நிலையத்துக்கு வந்த சிறுவனைப் பார்த்த அதிகாரிகள், வழி மாறி வந்துவிட்டதாக ஆரம்பத்தில் நினைத்தனர். சிறுவனை கதிரையில் அமரவைத்து பேச்சுக்கொடுத்த பின்னரே சிறுவன் வந்த நோக்கம் தெரியவந்தது.

தனது பெயர் ஹசானைன் என்றும் தனது தந்தை இக்பால் எனவும் சிறுவன் பொலிஸாரிடம் கூறினார். அத்துடன் தனது தந்தை தன்னை அடிக்கடி திட்டுவதாகவும், அடிப்பதாகவும் வீதிக்கு செல்லக்கூடாது என்றும் ஆற்றங்கரைக்கு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அத்தோடு தனது தந்தையைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் சிறுவன் பொலிஸாரிடம் கேட்டுள்ளார். கோபத்திலிருந்த சிறுவனிடம் சிரித்துப் பேசிய பொலிஸ் அதிகாரிகள் அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்போது சிறுவனின் தந்தை வெளியூருக்குச் சென்றிருந்ததால், சிறுவனின் தாயாரிடம் அறிவுரை கூறிய பொலிஸார் சிறுவனைக் கடுமையாகக் கண்டிகக் கூடாது எனவும் கனிவோடு பேசுமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.

அதேநேரம் ஒழுங்காக பாடசாலைக்குச் செல்ல வேண்டுமெனவும், குறும்புகள் செய்யக்கூடாது எனவும் சிறுவனிடமும் கனிவோடு பொலிஸார் அறிபுவுரை கூறினர்.

அதேவேளை சிறுவனின் தந்தைக்கு சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிறுவனுக்கு ஆதரவாக பேசியதாகவும் பிள்ளையுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாமெனக் கண்டித்தாகவும் அயலவர்கள் கூறுகின்றனர்.

சிறுவர்களின் இதுபோன்ற செயல்கள் பலருக்குச் சிரிப்பாக இருக்கலாம். ஆனாலும் குழந்தைகளின் அறிவார்ந்த செயல்கள் ஆச்சரியப்படவும் செய்கின்றன.