யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காதலர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இரண்டு சம்பவங்களிலும் கைதான இருவரும் (வயது 17) அண்மையில் நடைபெற்ற சாதாரணப் பரீட்சையில் தோற்றியிருந்தார்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கலாசார சீர்கேடுகள்
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14 வயது மாணவி பாடசாலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதலனுடன் சென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் – கலாசார சீர்கேடுகள் அதிகம் இடம்பெறுவதாகப் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு மாணவியைக் காதலன் வன்புணர்ந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவியைக் காணவில்லை என்று தாயார் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாகத் தேடுதல் நடத்திய பொலிஸார் மாணவியை மீட்டுள்ளனர்.
அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தனது காதலனால் வன்புணர்வுக்குப்படுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 17 வயதுடைய காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை

இதேவேளை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி 17 வயது காதலனுடன் வெளியில் சென்றுள்ள நிலையில், மாணவியின் பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அவர் காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்துக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.