கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பட்டானிச்சூரில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,
எதிர்வரும் ஐந்து வருடம் என்பது ஒரு முக்கியமான காலமாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டை பாதாளத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
கையேந்துகின்ற நிலைமைக்கு எமது நாடு வந்துவிட்டது. மக்கள் கஷ்டத்தில் வாழ்கின்றனர். அதேபோன்று விவசாயிகளும் வாடுகின்றனர். இங்கே நிறைய தேவைகள் ஏற்பட்டுள்ளன, நிறைய பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக சஜித் பிரேமதாசவோடு படித்த ஆற்றல் உள்ளவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இணைந்துள்ளனர். அத்துடன் நாட்டை கட்டி எழுப்பக்கூடிய வல்லவர்களும் இருக்கின்றார்கள். எனவே சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்.
அதன் ஊடாகத்தான் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் பெரும் எழுச்சியுடனும் வறுமைகள் நீங்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.