முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி பல தசாப்தங்களைக் கடந்தும் இன்றும் முடிவின்றித் தொடர்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர் இராமசாமி ரமேஷ் தெரிவித்தார்.
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த பேச்சுக்கள் 1994 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 1994 இல் அமோக வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எடுத்த முயற்சி மிகவும் காத்திரமானது. எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 2000 ஆம் ஆண்டு அவர்களால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு, சபை நடுவே தீயிட்டு எரிக்கப்பட்ட கசப்பான சம்பவத்தை அனைவரும் அறிவர். சந்திரிக்காவின் காலப்பகுதியைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் தொடர்ச்சியாகக் கூட்டப்பட்ட போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கமும் இவ்விடயத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்பட்டது. இருப்பினும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் நாட்டில் ஏற்பட்ட ஏனைய அரசியல் சூழ்ச்சிகள், நெருக்கடிகள் காரணமாக அந்த முயற்சியும் கைகூடாமல் போனது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பேசப்பட்ட போதிலும் முந்தைய முயற்சிகளைப் போலவே அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. அதேபோன்றதொரு முயற்சியே தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இன்றும் தொடர்வதாக விரிவுரையாளர் இராமசாமி ரமேஷ் சுட்டிக்காட்டினார்.



