கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமுல்படுத்தவே இன்றைய தினத்தை வங்கி விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தொடக்கம் தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் விடுமுறை காணப்படுகின்ற நிலையில் இந்த ஐந்து தினங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தை அமுல்படுத்த குறிப்பிட்ட கால எல்லையொன்று தேவைப்படுகின்றது எனவும் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுதல், நாடாளுமன்றத்திற்கு அதனை சமர்ப்பித்தல், பாராளுமன்றத்தில் நிதி செயற்குழு உள்ளிட்ட குழுக்கள் கலந்துரையாடுவதற்கு ஒரு சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சந்தை மூடப்படுவதன் ஊடாக, இந்த திட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்புகின்றது, என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த காலப் பகுதியில் வங்கி, இணைய வழி பணக் கொடுக்கல் வாங்கல்கள், ஏ.டி.எம் பணப்பரிமாற்று நடவடிக்கைகள், வார இறுதி வங்கி சேவைகள் என அனைத்து வங்கி சேவைகளும் வழமை போன்று செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் விசேட வங்கி விடுமுறையொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நேற்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் இன்றைய தினம் விசேட விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் வார இறுதி விடுமுறை தினங்களாகும். அதற்கமைய நேற்றைய தினம் தொடக்கம் தொடர்ச்சியாக ஐந்து தினங்களுக்கு விடுமுறையாக காணப்படுகின்றது.
வங்கிகளில் பணத்தை வைப்பு செய்துள்ள எந்தவொரு நபருக்கும், இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கு ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என சிலர் கட்டுக் கதைகளை முன்வைத்து வருகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் போது உள்நாட்டு வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வைப்பு செய்துள்ள பணம் மற்றும் அதற்காக தற்போது கிடைக்கின்ற வட்டி ஆகியவற்றில் எந்தவொரு குறைவும் ஏற்படாது என மத்திய வங்கி என்ற விதத்தில் உறுதியாக கூற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் வங்கி கட்டமைப்பு மற்றும் வங்கிகளில் வைப்பு செய்துள்ள மக்களின் பணம் ஆகியவற்றின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்கின்றது எனவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.