டயானா கமகேவுடன் மோதல்! பதவியை இழக்கும் அபாயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0
219

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஏதேனும் ஒரு தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு இன்று (06) கூடவுள்ளது.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் மோதல் ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் குறித்த குழுவானது இந்த விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டது.

விசாரணை

மேலும், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான நாடாளுமன்றத்தின் சிசிடிவி காட்சிகளையும் குழுவால் அண்மையில் அவதானிக்கப்பட்டது.

இதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினர் இன்று இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து விவகாரங்கள் விசாரிக்கப்பட்டு, அதன் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளது.

பதவியை இழக்க நேரிடும்

அதேவேளை, இந்த குழுவுக்கு இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டயானாவுடன் மோதல்! பதவியை இழக்கும் அபாயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Diana Gamage Assault Case Found Guilty

இந்நிலையில், இன்று கூடவுள்ள இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இந்தக் குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளில் ஏதேனும் ஒரு தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.