கனமழை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து: விமானம் இன்மையால் பிரபல பாடகர் ஹரிஹரனுக்கு நாடு திரும்ப முடியவில்லை

0
156

கடும் மழை காரணமாக தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக் கச்சேரியில் கலந்து கொள்வதற்காக இந்தக் குழுவினர் வந்திருந்தனர்.

எனினும் யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் அடைமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சியை இரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாக ஹரிஹரன் மற்றும் குழுவினரை தென்னிந்தியாவிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்புவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் மோசமான காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக வட மாகாணத்தில் நீடித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள், வீடுகள் என்பன வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.