கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகன முறைமை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடம் அரசாங்கம் மன்னிப்புகோர வேண்டும் எனும் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 மருத்துவ முகாமைத்துவம் குறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின்படி, வைரஸால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
அத்துடன், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், அப்போதைய நீர் வழங்கல் அமைச்சு கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் SARS-CoV-2 வைரஸைக் கண்டறியும் ஆய்வைத் தொடங்கியது.
ஆற்று நீர் மற்றும் வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் சாத்தியமான ஏனைய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் குறித்த நீரில் வைரஸ் இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது.
மேலும், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நீர் தொழில்நுட்பத்திற்கான சீனா-இலங்கை கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையத்தினால் இரண்டாவது ஆய்வும் நிறைவு செய்யப்பட்டது.
நிலத்தடி நீர் உள்ளிட்ட நீரேந்து பகுதிகளில் SARS-CoV-2 வைரஸ் பரவுவது பாதுகாப்பான புதைகுழிகள் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அத்துடன் ஒரு நபர் அல்லது உறவினர் தங்கள் விருப்பத்திற்கேற்ப இறந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு அனுமதிக்கும் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.