கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொலம்பியா மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி வெனிசுவேலாவில் நடைபெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து பெட்ரோவை நோக்கி ட்ரம்ப் “உன்னை கவனித்துக் கொள்” என கடுமையாக எச்சரித்திருந்தார். வெனிசுவேலா தலைநகர் கராக்கஸில் திடீர் தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸை அமெரிக்க படைகள் சிறைப்பிடித்தன.
இந்நிலையில் புதன்கிழமை (ஜனவரி 07) கொலம்பியா – அமெரிக்கா நாட்டு தலைவர்களுக்கிடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பெட்ரோவுடன் இடம்பெற்ற முதல் தொலைபேசி உரையாடல் இதுவாகும்.
போதைப்பொருள் பிரச்சினைகள் மற்றும் எங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக பெட்ரோ என்னை தொடர்பு கொண்டார் என தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அதோடு அவரது அழைப்பையும், பேச்சின் போக்கையும் நான் பாராட்டுகிறேன். விரைவில் வெள்ளை மாளிகையில் அவரை சந்திக்க எதிர்பார்க்கிறேன் என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெனிசுவேலா தலைநகர் கராக்கஸில் உள்ள இராணுவ இலக்குகளை குண்டுவீசி தாக்கி எண்ணெய் வளம் நிறைந்த அந்த நாட்டின் மீது வொஷிங்டன் தனது கட்டுப்பாட்டை உறுதி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



