கண்டி பிரதேசத்தில் செயற்படும் ஆட்கடத்தல் குழுவொன்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் மலேசியாவிலிருந்து பதிவாகியதாகக் கூறப்படும் சிறுவர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் விரைவில் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து விசாரணைகளை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த வாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து பல குழந்தைகள் மலேசியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழந்தை கடத்தல் ஊழல் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகமொன்று, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவை தொடர்புகொண்ட போது இந்த செய்தி தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பிலானன முழுமையான தகவல்கள் இதுவரை பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த செய்தி தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளேன். எதிர்வரும் நாட்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள உத்தியோகத்தர்களிடமும் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் மூலமாக குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் கோரப்படும் பட்சத்தில் அது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில சமயங்களில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு இவ்வாறு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வழங்கப்பட்டிருக்கலாம். இது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார். இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதால், விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினர் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தகவலின்படி வடக்கு மற்றும் கிழக்கில் 18 வயதுக்குட்பட்ட தமிழ் சிறுவர்கள் இனந்தெரியாதவர்களால் குறிவைக்கப்படுகின்றனர். இந்த குழந்தைகள் சட்டப்பூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்,
பின்னர் அவர்கள் போலியான பயண ஆவணங்களைப் பயன்படுத்தி பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி இதுபோன்ற மொத்தம் 13 குழந்தைகள் இதுவரை மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் ஒரு தரகர் இந்த கடத்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.