செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 3,500 வகைகள் உணவு வகைகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் 14 நாள்களுக்கு அனைத்து வேளைகளிலும் புதுப்புது உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
14 நாள்களும் ஒரு முறை பரிமாறப்பட்ட உணவு மறுமுறை வராத வகையில் உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உணவு தொழிலில் 52 ஆண்டு கால அனுபவம் கொண்ட 75 வயதான மூத்த சமையல் கலை நிபுணர் ஜி.எஸ். தல்வார்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சூப் வகை, பழச்சாறுகள், காய்கறி சாலட், குளிர்பானங்கள் எதுவுமே ஒருமுறை பரிமாறப்பட்டது மறுவேளை வழங்கப்பட மாட்டாது. பல்வேறு உணவு வகைகளை பரிசீலித்து 77 வகையான உணவுப் பட்டியலை சமையல் கலை நிபுணர் ஜி.எஸ்.தல்வார்தான் தயாரித்துள்ளார்.
பிரதான உணவு, சூப், பழரசம். நொறுக்குத்தீனி உட்பட 3,500 வகையான உணவுகளை ஜி.எஸ்.தல்வார்தான் தெரிவு செய்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைக்கிறாா். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடக்க விழாவும் மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் திகதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலையில் போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.
இதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறாா்.
விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பிரதமரை வரவேற்கின்றனா். செஸ் போட்டிகள் முடியும் வரை ஜூலை 28முதல் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை செஸ் திருவிழாவோடு சேர்த்து இந்த உணவுத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
