வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ள அதிபர், ஆசிரியர்கள்

0
437

நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், அரச தலைவரால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமைக்கு எதிராக எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர் அதிபர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடக சந்திப்பை நடத்திய அவர், எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுவாக்க தாம் விடுத்த கோரிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் நிராகரித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, மக்கள் எழுச்சிக்கு எதிராக ஆயுத ரீதியான அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

றம்புக்கண சம்பவம் தொடர்பில் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நாடு தழுவிய ரீதியில் ஆட்சி மாற்றத்தை கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழர் தாயகப் பகுதிகளில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்காக, எவரும் குரல் கொடுக்காமை ஒரு துர்ப்பாக்கியமான வரலாறு எனவும் அந்த ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.