புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதோடு, இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.