குருந்தூர்மலையில் பொங்கல் விழாவை நடத்திவிட்டோம் என்ற மமதையில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் மக்களும் கருத்து வெளியிடுகின்றனர்.
பொங்கல் விழாவை நடத்தியமைக்காகக் குருந்தூர்மலை தமிழர்களின் சொத்து என்று அவர்கள் தப்புக்கணக்குப் போடக்கூடாது என தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளான சரத் வீரசேகர, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகிய எம்.பிக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அவர்கள் கூறுகையில், குருந்தூர்மலைக்கு எவரும் வந்து வழிபடலாம். மத வழிபாட்டைக் குழப்புவது பௌத்த சிங்களவர்களின் நோக்கம் அல்ல.
சகல மதத்தவர்களையும் அவர்கள் சமமாக மதிப்பவர்கள். ஆனால், பௌத்த சிங்களவர்களுக்குச் சொந்தமான குருந்தூர்மலையைத் தமிழர்கள் உரிமை கோருவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
பொங்கல் விழாவை நடத்தியமைக்காகக் குருந்தூர்மலை தமிழர்களின் சொத்து என்று அவர்கள் தப்புக்கணக்குப் போடக்கூடாது. குருந்தூர்மலைக்கு நேற்றுச் சென்ற பௌத்த பிக்குகளும், பௌத்த சிங்கள மக்களும் அமைதியாக வழிபட்டார்கள்.
ஆனால், அங்கு பொங்கல் விழாவுக்கு வந்த தமிழர்கள், பௌத்த பிக்குவை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மீண்டும் மீண்டும் ஆணித்தரமாகக் கூறுகின்றோம் குருந்தூர்மலை பௌத்தர்களின் சொத்து. அது தமிழர்களின் சொத்து அல்ல என தெரிவித்துள்ளார்.