வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பௌத்த தேரர்கள்! ஏற்றுக் கொள்ளும் அமைச்சர்

0
208

பௌத்த தேரர்களின் செயற்பாடுகளினாலேயே வடக்கு  மற்றும் கிழக்கில் உள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சம் ஏற்படுகின்றது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,

தொல்பொருளியல் என்பது சட்டத்துக்குட்பட்ட விடயமாகும். தொல்பொருள் கட்டளை சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்தோடு இந்த விவகாரத்தில் பௌத்த தேரர்களும், அரசியல்வாதிகளும் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும்.

பௌத்த தேரர்களால் பிரச்சினை

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பௌத்த தேரர்கள்! ஏற்றுக் கொள்ளும் அமைச்சர் | Department Of Archeology Sri Lanka

சட்டத்துக்கமைய தொல்பொருள் திணைக்களத்துக்கு மாத்திரம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். அதனை விடுத்து தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை முன்னெடுக்கும் பகுதிகளுக்குச் சென்று அங்கு சில பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக வீண் பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. எனவே இந்த விடயத்தில் தலையிடுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

இந்து ஆலயங்களை அழிப்பதற்கோ , தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கோ எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இலாபத்தை ஈட்ட முயற்சிக்காமல் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வட, கிழக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.