மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் காணவில்லை – தந்தை புகார்

0
201

வவுனியா ராசேந்திரகுளம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு வயதான மகளின் உடலை சிலர் தோண்டி எடுத்துச் சென்றுள்ளதாக தந்தை நெலுக்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி லிங்கராஜா தீபிகா என்ற ஒரு வயதும் 11 மாதங்களுமான சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். சிறுமியின் உடல் இராசேந்திரகுளம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் மண்வெட்டி ஒன்று இருப்பதாகவும் புதைக்குழி தோண்டப்பட்டுள்ளதாகவும் கிராமத்தை சேர்ந்த சிலர் சிறுமியின் தந்தையிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவர் மயானத்திற்கு சென்று உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்த்த போது குழிக்குள் இருந்த உடல் காணாமல் போயுள்ளது.

உடனடியாக நெலுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் பொலிஸார் புதைக்குழியை தோண்ட பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியை கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.