பாஜக அழுத்தம்; “நாம் 200“ நிகழ்வில் இடை நிறுத்தப்பட்ட மு.க. ஸ்டாலினின் வாழ்த்து செய்தி

0
198

கொழும்பில் நடைபெற்ற “நாம் 200“ நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்துக் காணொளி ஒளிப்பரப்புவதை பாரதிய ஜனதா அரசு தடுத்துள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்குத் தேவையான தேயிலை, கோப்பி, இறப்பர் ஆகியன ஏராளமாக பயிரிடப்பட்டன.

இந்த தோட்டங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி விவசாய உற்பத்தி சார்ந்த துறைகளில் உழைப்பதற்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

தென்தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தியது பிரித்தானிய அரசு. அவர்கள் இலங்கையில் மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

பிரித்தானியரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து 200ஆவது ஆண்டு தற்போது நிறைவடைந்துள்ளது.

“நாம் 200 ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் கொழும்பில் இடம்பெற்றன. இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டிலிருந்தும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக மலையகத் தமிழர்களின் நாம் 200 விழாவிற்கு வாழ்த்துரை அனுப்பியிருந்தார்.

அந்த உரையில், “மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள்! மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு – இலங்கையில் கோப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகாலம் முதல் தொடங்குகிறது.

1823 ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர் 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து கோப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது.

கோப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோப்பித் தோட்டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் இறப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான்.

இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள் தங்களது இரத்தத்தையும், வியர்வையையும், காலத்தையும், கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.

“கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்!” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி அரசு இறப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில் மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது.

கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டிருந்தார். முதல்வரின் உரை ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காணொளி உரையை ஒளிபரப்ப கூடாது என்று ஒன்றிய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இன்று வெளியான இந்து ஆங்கில நாளேடு (06.11.2023) விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொளி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது கடும் கண்டனத்துக்குரியது“ எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.