வியட்நாமில் எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. வியட்நாமில் வடக்கில் உள்ள Phu Tho மாநிலத்தில் 5 வயதுச் சிறுமி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமியுடன் நேரடித் தொடர்பில் இருந்த சுமார் 65 பேரிடம் சோதனைகள் நடத்தப்பட்டன. எனினும் அவர்களில் எவரும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் சம்பவங்களைக் கண்காணித்து, கண்டறியும் வழிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமில் 128 பேரிடம் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது.
அவர்கள் H5N1 கிருமியால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் பாதிப் பேர் கிருமிக்குப் பலியாயினர்.

அத்துடன் சுவாசத் தொற்று, இலேசான காய்ச்சல், இருமல், கடுமையான நிமோனியா ஆகிய அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டன.
இந்நிலையில் உயிரிழந்த அல்லது நோய்வாய்ப்பட்ட கோழியை உட்கொள்ளக்கூடாது என வியட்நாம் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.