‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ – ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்

0
36

அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

காசாவில் நடக்கும் கொடூரமான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் சிரியா, லெபனான், ஈரான், ஏமனில் மீண்டும் மீண்டும் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தி இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஐநா பாதுகாப்பு சபையில் நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 24வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் அசிம் இப்திகார் அகமது குற்றம் சாட்டினார்.

அப்போது ஐ.நா.வுக்கான இஸ்ரேலின் நிரந்தர பிரதிநிதி டேனி டானன், பாகிஸ்தானின் தூதரை நோக்கி தனது கையை நீட்டி “இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி ‘வெளிநாட்டு மண்ணில் ஒரு பயங்கரவாதியை ஏன் குறிவைக்க வேண்டும்’ என்பது அல்ல. ‘ஒரு பயங்கரவாதிக்கு ஏன் அடைக்கலம் கொடுக்கப்பட்டது?’ என்ற கேள்வியைத்தான் கேட்க வேண்டும். இதில் பின்லேடனுக்கும், ஹமாஸுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

இஸ்ரேலுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி போலவே, அந்த துயரமான நாள் (9/11) நெருப்பு மற்றும் ரத்தத்தின் நாள். 9/11 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிந்தைய நாட்களில், பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, அவர்களுக்கு நிதியளிக்கவோ என்று கூறப்பட்டது. அந்தக் கொள்கை இப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும்” என்றார்

இஸ்ரேல் தூதர் டானனின் கருத்துக்கு பதிலளித்த பாகிஸ்தான் தூதர் அஹ்மத், “நீங்கள் ஒரு ஆக்கிரமிப்பாளர். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை தொடர்ச்சியாக மீறுபவர். இஸ்ரேல், இந்த அவையை துஷ்பிரயோகம் செய்து இந்த அவையின் புனிதத்தை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது முதல் முறை அல்ல. மற்றவர்களை நோக்கி விரல் நீட்டி, அதன் சொந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களை மறைக்கும் விதமாக செயல்படுகிறது.” என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் தூதர், “ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார், அமெரிக்காவை யாரும் கண்டிக்கவில்லை. இந்த கவுன்சிலில் உள்ள மற்ற நாடுகள் பயங்கரவாதிகளைத் தாக்கும்போது, ​​யாரும் அவர்களைக் கண்டிப்பதில்லை. இந்த இரட்டை நிலைப்பாடுதான் பிரச்சினை. நீங்கள் உங்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும், இஸ்ரேலுக்கு வேறுபட்ட நிலைப்பாட்டையும் கொண்டிருப்பதுதான் பிரச்சினை.

9/11 என்ன நடந்தது என்ற உண்மையை நீங்கள் மாற்ற முடியாது. ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தார், அவர் உங்கள் நாட்டில் கொல்லப்பட்டார் என்ற உண்மையை நீங்கள் மாற்ற முடியாது. நீங்கள் எங்களை விமர்சிக்கும்போது, இதுபற்றி ​​நான் உங்களிடம் கேட்பேன்.” என்றார்