மகனுக்கு மன்னிப்பு வழங்கிய பைடன்; நீதியின் துஷ்பிரயோகம் டிரம்ப் விமர்சனம்

0
141

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ள நிலையில் இந்த செயல் நீதியின் துஷ்பிரயோகம் என டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் வரிக் குற்றத்திற்காக இந்த மாதம் தண்டனை விதிக்கப்படவிருந்தார். அதேவேளை தனது மகனுக்கு மன்னிப்பு வழங்கமாட்டேன், தண்டனையை குறைக்க மாட்டேன் என முன்னர் தெரிவித்திருந்த நிலையிலேயே பைடன் தற்போது மன்னிப்பை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பைடன் வெளியிட்ட அறிக்கையில், நீதித்துறை அமைப்பை நம்பினாலும், அரசியல் காரணங்களுக்காக தனது மகன் மீது குற்றம் சாட்டப்பட்டதாக அவர் நம்புகிறார். ஹண்டர் பைடன் செப்டம்பர் தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் ஜூன் மாதம் சட்டவிரோத போதைப்பொருள் உபயோகிப்பவராக இருந்தபோது துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவரது இந்த குற்றம் ஹண்டர் பைடனை அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட ஒரு தற்போதைய ஜனாதிபதியின் முதல் வாரிசாக மாற்றியது.

இருப்பினும் ஜனாதிபதி ஜோ பைடன் மகனுக்கு மன்னிப்பை வழங்கியுள்ள நடவடிக்கை அவரது சொந்த ஜனநாயக கட்சி ஆர்வலர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் உறவினர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சிலர் வாதிடுகின்றனர். இதற்கிடையில் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் இந்த மன்னிப்பை “நீதியின் துஷ்பிரயோகம்” என விமர்சித்துள்ளார்.

அதோடு ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகனுக்கு மன்னிப்பு வழங்க முடிவு செய்ததைப் போலவே ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தின் மீதான தாக்குதலில் வழக்குத் தொடரப்பட்ட குடியரசுக் கட்சி ஆதரவாளர்களும் ஜனாதிபதியின் மன்னிப்புக்கு தகுதியுடையவர்களா என்று டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.