உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்த மட்டக்களப்பு மாணவன்!

0
460

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியாகியுள்ளன. அதற்கமைய மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்வண்ணன் துவாரகேஷ் என்ற மாணவன் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்திலும் அகில இலங்கை ரீதியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பெறுபேறுகள்  

இவர் 2.98 Z புள்ளிகளையும் பெற்றுள்ளதோடு, உயிரியல், பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் மற்றும் பொது ஆங்கிலத்திலும் ஏ சித்தி பெற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் கொவிட் தொற்று பரவல் காரணமாக இவ்வாண்டு பெப்ரவரி 7 ஆம் திகதியே நடத்தப்பட்டன. அதற்கமைய பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 35 பேர் பாடசாலை மூலமும் 36 ஆயிரத்து 647 பேர் தனியார் பரீட்சாத்திகளாகவும் பரீட்சைக்குத் தோற்றினர்.

இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 491 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 62.9 சதவீதமாகும்.

இதே வேளை பாடசாலை மூலம் பரீட்சைக்குத் தோற்றிய 37 பரீட்சாத்திகளினதும், 12 தனியார் பரீட்சாத்திகளினதும் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சை மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்த மட்டக்களப்பு  மாணவன்! | General Standard Higher Examination

பரீட்சைகள் நிறைவடைந்து 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக வினாத்தாள் திருத்தும் பணிகள் தாமதமடைந்தன.

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில் இம்மாதம் பரீட்சை பெறுபேறுகளை இறுதிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கல்வி அமைச்சரினால் இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.