கப்பம்’ என்பது வெறுமனே பணம், பொருள் மாத்திரமல்ல. தனது அதிகாரத்தை பாவித்து மற்றொருவரை மிரட்டலுக்கு உள்ளாக்கி அவரை நிர்ப்பந்தித்து, அவரிடம் இருந்து சலுகையையோ அல்லது ஏதாவது ஒரு காரியத்தையோ பெற முயல்வதும்கூட ஒருவகை கப்பம்தான்.
மட்டக்களப்பில் அரசாங்க அதிகாரிகள், திணைக்களத் தலைவர்களை தொலைபேசியில் மிரட்டி ‘கப்பம்’ கேட்கும் செயலை மட்டக்களப்பு கணக்கு தனிக்கை அதிகாரி ஒருவர் மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பில் கணக்கு தணிக்கை அதிகாரியாகக் கடமையாற்றும் ஒரு அரசாங்க உயரதிகாரியே இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளதுடன், அவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஒலிப்பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தனிப்பட்ட விரோதத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவும், சில நடவடிக்கைகளில் இருந்து சிலரை அரசியல் ரீதியாக ஓதுங்கிகொள்ள நிர்ப்பந்திப்பதற்காகவும் அந்த உயரதிகாரி ‘தான்தோன்றி’த்தனமாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்துவருவதாகக் கூறப்படுகின்றது.
சொந்தக் காரியங்களை நிறைவேற்றுக்கொள்வதற்காக அரச அதிகாரங்களைப் பாவிக்கும் குறிப்பிட்ட அந்த அதிகாரி பற்றிய முறைப்பாடுகளை சிறிலங்காவின் அரசதலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பு: மின்னஞ்சல் ஊடாக எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள், தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் போன்றனவற்றின் உண்மைத்தன்மை செய்தியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதும், குறிப்பிட்ட அதிகாரியின் புகைப்படத்தையும், அவரது தொலைபேசி உரையாடலையும் நாம் வெளியிடுவோம்.