திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி

0
18

திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நாட்டின் மீது திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும் கலாசாரத் தாக்குதலைக் கண்டிப்பதற்காகவே நாம் இந்த விடயத்தில் தலையிட்டோம். நாட்டின் கலாசாரங்களை அழிக்கும் சம்பவங்களுககு சர்வஜன அதிகாரம் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது.  திருகோணமலைச் சம்பவம் என்பது அதில் ஒன்று மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இதனை விடவும் பாரதூரமான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நாட்டில் வேண்டுமென்றே ஒரு பதற்ற நிலையை உருவாக்கவும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் அரசாங்கம் பயன்படுத்தும் ஒரு கருவியே இந்த விவகாரம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் இந்த விடயத்தில் இனவாதத்தை உருவாக்க முயற்சிப்பது தெளிவாக எமக்குத் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.