பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அதன் காபந்து பிரதமராக அன்வர்-உல்-ஹக் ககர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய மூன்று நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டது.
பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையற்ற அரசியல் சூழலில் தேர்தலொன்றை நடத்துமாறு பொது மக்களும் எதிர்கட்சிகளும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கபட்டு தற்போது புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலைக்கப்பட்ட பாராளுமன்றம்
ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 12 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இருப்பினும் பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் என ஷபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றம் 9ஆம் திகதி கலைக்கப்பட்டது.
“பாராளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளதுடன், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் காபந்து அரசாங்கம் செயற்படும்” எனவும் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இதன்படி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

காபந்து பிரதமர் நியமனம்
பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் இடையே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
காபந்து பிரதமர் தொடர்பில் இருவரும் பிரதமர் மாளிகையில் கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.
இதன்போது, இரு தலைவர்களும் அன்வர் உல்-ஹக் ககரின் பெயரை காபந்து பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் இறுதி ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காபந்து பிரதமராக உல்-ஹக் ககர் தெரிவுசெய்யப்ட்டதுடன், தேர்தல் வரை அரசைத் வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலை மேற்பார்வையிடும் பொறுப்பும் அன்வர்-உல்-ஹக் கக்கருக்கே உண்டு.

காபந்து பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கர்
பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை சேர்ந்த அதிகளவில் அறியப்படாத அரசியல்வாதி தான் அன்வர்-உல்-ஹக் ககர். இவர் நாட்டின் சக்திவாய்ந்த இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிவருபவர்.
2018 முதல் செனட் சபையின் உறுப்பினராக செயற்பட்டு வருகிறார்.
2018 பலுசிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி சுயேட்சை வேட்பாளராக தனது தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் மார்ச் 12 அன்று செனட் சபையில் நுழைந்தார்.
மேலும், அன்வர்-உல்-ஹக் ககர் தேர்தல் வரை பாகிஸ்தான் நாட்டை வழிநடத்த ஒரு புதிய அமைச்சரவையைத் தேர்வு செய்ய உள்ளார் என பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார விடயங்களில் கொள்கை முடிவுகளை எடுக்கக் காபந்து பிரதமருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சட்டப்படி 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதன்படி நவம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். இருப்பினும், தற்போது அங்கிருக்கும் பொருளாதார சிக்கலால் தேர்தல் ஆறு மாதங்கள் வரை தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் காபந்து பிரதமரின் நியமனம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.