ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17.02.2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே வரவு – செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார்.
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்திருந்தமையால் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.
அரச ஊழியர்களுக்கு எதிர்பார்க்க முடியாத வகையில் சம்பள உயர்வை அரசாங்கம் வழங்க உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார். அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்களவான சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது.
அரச ஊழியர்களை போன்று தனியார் துறைக்கான சம்பள உயர்வும் இடம்பெற வேண்டுமென தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளன.
பொருளாதார வளர்ச்சிக்கான பலத் திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
அதேபோன்று ஓய்வூதியம் அதிகரிப்பு, விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு, வயது முதிந்தோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு முன்மொழிவுகளும் வரவு – செலவுத் திட்டத்தில் இடம்பெற உள்ளது.
இந்த நிலையில் வரவு – செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள் குழுவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டனர்.