மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி மீது பொலிசார் கொடூரமான முறையில் தாக்குதல்

0
278

தற்போது மட்டக்களப்பில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலத்தமடு, மாதவனை நில அபகரிப்புக்கு எதிராகவும் பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி மீது ஆண் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக காணொளியொன்று வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் கைகளில் கோப்பைகளை ஏந்தி ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மையினரால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23 நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் இவ்வாறு கோப்பைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாரம்பரிய மேய்ச்சற் தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை நேற்று மேற்கொண்டனர்.

மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு ‘ரணிலுக்காக நாம் 2024’ என்ற பாரிய கட்டவுட் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கட்டவுட் முன்னால் தும்புத்தடியோடு  நின்றவாறும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடையும் குறிப்பிடத்தக்கது.

அதிபரே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் தொண்டமான் எமக்கு வேண்டாம், இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற் தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பாளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது.