ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே இவ்வாறு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தீர்மானம் எடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.