செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால நவீன காலகட்டத்தில் மக்களின் பயன்பாடுகளில் முக்கிய அங்கமாக செல்போன்கள் இருந்து வருகிறது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தி வரும் சாதனம் செல்போன்கள். கண் விழிப்பது முதல் துாங்கும் வரை அதிகமாக மக்கள் பயன்படுத்தி கொள்ளும் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது இந்த செல்போன்கள்.

இதனால் செல்போன் பயன்படுத்துவோர் இரவு நேரங்களில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்றி விட்டு துாங்க செல்கின்றனர்.
இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் அருகே அதிக நேரம் சார்ஜ் ஏற்றப்பட்ட செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது.
பரேலி மாவட்டம் பச்சுமி கிராமத்தைச் சேர்ந்த சுனில்குமார் காஷ்யப் – குசும் காஷ்யப் தம்பதியருக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.

இச் சம்பவம் நடைபெற்ற நாளில் அந்த குழந்தை கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது சுனில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றி உள்ளார்.
குழந்தை துாங்கி கொண்டிருந்த கட்டிலில் செல்போனை வைத்துவிடவே அனைவரும் அயர்ந்து துாங்கி கொண்டிருந்தனர். அப்போது செல்போன் திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் கட்டில் தீப்பற்றி ஏறிய தொடங்கியது. இதில் 30 சதவீத தீக்காயம் அடைந்த அந்த பச்சிளம் பெண் குழந்தை மருத்துவமனைக்கு துாக்கி செல்லப்பட்டது.
குழந்தையை சோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.