ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த அமெரிக்க அரசியல் தலைவர் காலமானார்

0
21

அமெரிக்காவின் மிகச்சிறந்த சிவில் உரிமைப் போராட்ட வீரரும், உலகத் தமிழர்களின் உற்ற நண்பருமான ரெவரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன் (Jesse Jackson) தனது 84-வது வயதில் காலமான செய்தி உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2026 பிப்ரவரி 17 அன்று அவர் இயற்கை எய்தியதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராகப் பராக் ஒபாமா பதவியேற்றபோது அதைக் கண்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டவர் ஜாக்சன். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஜெஸ்ஸி ஜாக்சனின் பங்கு என்றும் மறக்க முடியாதது. 2009-ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று லண்டனில் நடைபெற்ற “உலகத் தமிழர் பேரவை” (World Tamils Forum) மாநாட்டில் அவர் ஆற்றிய உரை இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த அந்தத் தருணத்தில் “இந்தக் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை உலகச் சமூகத்திற்கு இருக்கிறது” என அவர் உரக்கக் குரல் கொடுத்தார்.

அவர் தனது உரையில் குண்டுகள் முழங்கும் போர்க்களத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் உடனடிப் போர் நிறுத்தம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். “வன்முறை என்பது ஒருபோதும் தீர்வாகாது அகிம்சை என்பது பலவீனம் அல்ல, அது மனதின் வலிமை” என்று குறிப்பிட்டார்.

வட அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர் “துப்பாக்கிகளால் அல்ல சிந்திப்பதன் மூலமே எதற்கும் தீர்வு காண முடியும்” என்று தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

“நாம் போராடாத எந்தப் போரையும் வென்றதில்லை” என்ற அவரது தாரக மந்திரம் தமிழினத்திற்குப் பெரும் உந்துதலை அளித்தது. அதேசமயம் ஈழத் தமிழர்களின் வலியை உலகறியச் செய்யத் தனது “ரெயின்போ புஷ்” (Rainbow Push Coalition) அமைப்பு எத்தகைய உதவிகளையும் செய்யத் தயார் என அவர் அன்று முன்வந்தார்.

போர்க் களத்திலிருந்து தமிழர்களை மீட்பதற்கு உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழர்களே வரையறுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

சர்வதேசச் சட்டம், மனித உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியமாக இருந்தது. “நம்பிக்கை மிகவும் முக்கியமானது உங்களால் ஒரு நிலையைத் தாண்டிச் சிந்திக்க முடிந்தால் உங்களால் அங்குக் செல்ல முடியும்” என்ற அவரது வார்த்தைகள் உலகெங்கும் உள்ள விளிம்புநிலை மக்களுக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளன.

இலங்கையில் நிலவும் நெருக்கடி தீர்க்கப்பட்டு அங்கு நீதியுடன் கூடிய அமைதி நிலவ வேண்டும் என்பதைத் தனது இறுதி உரையில் அவர் ஒரு கோரிக்கையாகவே முன்வைத்தார். ஜெஸ்ஸி ஜாக்சனின் மறைவு அமெரிக்காவிற்கு மட்டுமல்ல நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

இந்நிலையில் மார்ட்டின் லூதர் கிங்கின் சீடராகத் தனது பயணத்தைத் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த ஜாக்சனின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.