பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்க பிரபலம்!

0
21

பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான தீவுக்குத் தான் சென்றிருந்ததை அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே எப்ஸ்டீனுடனான அனைத்து தொடர்புகளையும் தான் துண்டித்துவிட்டதாக லட்னிக்(Howard Lutnick) இதற்கு முன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் அமெரிக்க நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் அவர் 2012 ஆம் ஆண்டு எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதை உறுதிப்படுத்தின.

இது குறித்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த லட்னிக் (Howard Lutnick) 2012 டிசம்பர் 23 ஆம் திகதியன்று தனது மனைவி, நான்கு பிள்ளைகள் மற்றும் பணியாளர்களுடன் படகில் சுற்றுலா சென்றபோது இடையில் எப்ஸ்டீனின் தீவில் ஒரு மணிநேரம் மதிய உணவிற்காகத் தங்கியிருந்ததை உறுதிப்படுத்தினார்.

எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக 2008 ஆம் ஆண்டே தண்டிக்கப்பட்ட நிலையில் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லட்னிக் அந்தத் தீவுக்குச் சென்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

14 ஆண்டுகளில் எப்ஸ்டீனை இரண்டு முறை மட்டுமே தான் சந்தித்ததாகவும், அவருடன் தமக்கு எவ்வித ஆழமான உறவும் இருந்ததில்லை என்றும் லட்னிக் (Howard Lutnick) வாதிட்டார். இருப்பினும் நாடாளுமன்றத்திற்கும் அமெரிக்க மக்களுக்கும் லட்னிக் உண்மையை மறைத்து முரண்பட்ட தகவல்களை வழங்கியதாக செனட்டர் கிறிஸ் வோன் ஹோலன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தத் தகவல் மறைப்பு காரணமாக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் லட்னிக்கை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதேவேளை, பாலியல் துஷ்பிரயோக வழக்குகளுக்கான கால வரம்பை நீக்கும் ‘வெர்ஜீனியா சட்டத்தை’ நிறைவேற்றுமாறு எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

எப்ஸ்டீன் வழக்கின் முக்கியப் போராட்டவாதியான வெர்ஜீனியா கிஃப்ரெ நினைவாக இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 35 இலட்சத்திற்கும் அதிகமான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் தற்போது நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்டு வருவதால், பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இதில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.