யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது.
குறித்த கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான நாகலிங்கம் வேதநாயகனின் பங்கேற்புடன் நடைபெற்றது.
கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியினூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள் அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன் விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைசார் விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய ஆளுநர் நடப்பு ஆண்டின் மே மாதமும் நிறைவுகின்றது. மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும் – வினைத்திறனாகவும் செலவு செய்யவேண்டும். ஜனாதிபதி மாகாண ஆளுநர்களை அண்மையில் சந்தித்திருந்தார். இதன்போது மாகாணங்களுக்கு கடந்த காலத்தைவிட 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளமையைச் சுட்டிக்காட்டியதுடன் ஒரு சதம் நிதியையும் திருப்பி அனுப்பாமல் சரியாகச் செலவு செய்யவேண்டும் என்றும் கோரினார். எனவே இதனைச் செயற்படுத்த உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பைக் கோருகின்றேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஆளுநர் குறிப்பிட்டதைப்போன்று ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும் வினைத்திறனாகவும் செலவு செய்ய அதிகாரிகள் ஒத்துழைக்கவேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார். மேலும், சில அரச நிறுவனங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறீபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இ.அர்ச்சுனா ஆகியோர் பங்கேற்றனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.