இந்தியாவின் சுதந்திர தினமான இன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் புரூஸ் லீயின் தீவிர ரசிகரான அர்ஜுன் அவரது பாணியிலேயே கராத்தேவை முறையாக கற்றுக்கொண்டு அதை திரைப்படங்களில் தனது சண்டைக்காட்சிகளில் புகுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
பிரபல கன்னட நடிகரின் மகனான இவர் “சிம்ஹா மரி சய்ன்ய” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இவ்வாறு அறிமுகமானதை தொடர்ந்து கன்னடா, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் ஜெய்ஹிந்த், காக்கிச் சட்டை போட்ட மச்சான், குருதிப்புனல் உள்ளிட்ட தேசப்பற்றை ஊற்றும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பல ரசிகர்களை கவர்ந்ததோடு அனைவருக்கும் பரிச்சயம் ஆனார்.
தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன் இதுவரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த ஆக்சன் நாயகனாக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இயல்பிலேயே இந்திய தேசத்தின் மீது மிகப்பெரிய பற்று கொண்ட அர்ஜுன், தேசப்பற்று மிகுந்த பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன் முகங்களை கொண்டுள்ள அர்ஜுன் 1994 ஆம் ஆண்டு இயக்கி நடித்திருந்த ஜெய்ஹிந்த் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து அவரை புகழின் உச்சியில் நிறுத்தியது.
எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்படும் மிகச் சிறந்த நடிகராக இன்றுவரை வலம் வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒகஸ்ட் 15 ஆம் திகதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.