-பொறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டை குழப்பக்கூடாது
அரசியலமைப்புக்கிணங்க உரிய தினத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பொறுப்பற்ற அறிவிப்புக்களூடாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக அரசோ, பாராளுமன்றமோ ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் திரளைப்பார்த்து எத்தகைய அரசியல் முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அவர், குழப்பமடையாது பின்வாங்காமல் முன் செல்வோம் என்றும் தெரிவித்தார்.
சேவைகள் சபை மண்டபத்தில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூட கலையரங்கை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில், உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர்;
தேர்தல் தொடர்பான அரசின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்குள் இத்தேர்தல் நடத்தப்படும். இதற்கான தயார் நிலைபற்றியும் ஆணைக் குழுவினர் அறிவித்துள்ளனர். அது தொடர்பில் அரசாங்கமும் அறிவித்துள்ளது.
மே தினத்தின் போது சனத்திரளைப் பார்த்து தேர்தலை தள்ளி வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில ளித்த பிரதமர்;
மக்கள் கூட்டத்தைப் பார்த்து எந்தவிதமான அரசியல் தீர்மானமும் எடுக்கப்படுவதில்லை. முன்னோக்கி செல்வதைத் தவிர குழப்பமடையவோ அல்லது பின்னோக்கிச் செல்லவோ வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது.ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்ட அன்றைய இரவிலிருந்தே ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்த நடவடிக்கை நாம் எடுத்தோம். பாராளுமன்றத்தை மூடி அழிவை ஏற்படுத்த முற்பட்டவர்களை விரட்டியடித்து, நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதை எவரும் மறந்து விடக்கூடாது. ஜனநாயகம் மட்டும் அவ்வாறு கட்டியெழுப்பப்படவில்லை. பாராளுமன்ற முறைமையையும் மக்கள் ஆணையையும் முன்னெடுத்து நாட்டின் அபிவிருத்திக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டத்தின்படி செயற்பட்டோம்.

தேர்தல் சட்டத்தினை மாற்றியமைக்க வேண்டுமாயின், பின்பற்றுவதற்கு உள்ள மிகவும் கடினமான மூன்றிலிரண்டு பெரும்பான்மை முறைமை உள்ளது. அவ்வாறில்லாது, அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத்தை நடத்திச் செல்லலாம். தேவைப்பட்டால் விரைவில் வீட்டிற்கு செல்லவும் முடியும். அல்லது எமக்கு வீட்டுக்குப் போக வேண்டும் என்று நாமே சொல்லவும் முடியும். அதற்கும் அரசியலமைப்பில் இடமுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பொதுத் தேர்தல். பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிலர் பொறுப்பில்லாமல் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடுகிறார்கள். அரசாங்கத்தில் எந்தச் சூழலிலும் விவாதிக்கப்படாத ஒரு விடயம் பற்றி, திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு, பொறுப்பற்ற வகையில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக அரசோ, பாராளுமன்றமோ ஒருபோதும் அனுமதிக்காது.ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடமே உள்ளது. அரசியலமைப்பின் படி முன்கூட்டியே அழைப்புவிடுக்கவும் முடியாது. பின்னர் அழைக்கவும் முடியாது. இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி தேர்தலை நடத்தும்.
இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஆணை ஜனாதிபதிகளுக்கு இருந்துள்ளது. தமது சொந்த அரசாங்கங்களை வைத்திருந்த ஜனாதிபதிகள், வெற்றி பெறலாம் என நினைத்து அரசாங்கத்தை கலைத்து தோற்றுப்போன சம்பவங்களை நாம் பார்த்திருக்கின்றோம்.
ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிக்குப் போக வேண்டியதாயிற்று. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. புதிய பாராளுமன்றம் ஒன்று உருவாகி இரண்டரை வருடங்களின் பின்னர் அதனை கலைப்பதற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு உள்ளது.
சவால்களுக்கு மத்தியில் எமது பாராளுமன்றம் மிகவும் பொறுமையாக பயணிக்கின்றது. கருத்து வேறுபாடுகளும் இல்லாமலி ல்லை. பாராளுமன்றத்தினால் தொடர்ந்தும் இயங்க முடியாவிட்டால் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும். பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதிக்கு அதனைக் கலைக்க முடியும்.