சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக்க தெரிவித்தார்.
எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டலும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வருட இறுதிக்குள் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மூலம் சுமார் 480 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடிந்துள்ளது. வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையையும் மீண்டும் ஆரம்பித்தோம். அந்த நிறுவனம் இன்னும் இலாபமீட்டும் நிறுவனமாக மாறவில்லை. ஆனாலும் ஏற்கனவே உள்ள கடனை செலுத்தி ஊழியர்களின் சம்பளத்தை வழங்கி அதனைத் தொடர்ந்து செயற்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
நம் நாட்டில் உள்ள வளங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதை செயல்படுத்துவதில் பல்வேறு தடைகள் எழுகின்றன. உதாரணமாக பொஸ்பேட் ஏற்றுமதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகளையும் தடைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பிரச்சினைகள் எழுகிறது என்பதற்காக நாட்டின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதை நிறுத்தக் கூடாது. நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்திருக்கும் வேளையில் அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளாததை நான் பாரிய குற்றமாகப் பார்க்கிறேன்.
சீமெந்துக் கூட்டுத்தாபனம் தற்போது பெயரளவிலேயே செயற்படுகிறது. சுமார் 5000 ஏக்கர் காணியும் பல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனிம வளங்களும் அங்கு உள்ளன. அதை வருமானம் ஈட்டும் மூலங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதன்படி வருடத்திற்கு சுமார் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எல்ல நகரம் தற்போது சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. எல்ல நகரில் மாத்திரம் தினமும் 3000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்றால் நாடு முழுவதும் எவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருக்க முடியும் என்பதை மதிப்பிடலாம். இந்த வாய்ப்புகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் சாமர சம்பத் தசனாயக்க தெரிவித்துள்ளார்.