நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து: விரைவில் சட்டமூலம்

0
63

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

“சம்பளம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய ஒன்று, ஆனால் ஓய்வூதியம் கண்டிப்பாக இரத்து செய்யப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கிழக்கு அனுராதபுரம் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அரசாங்க வாசஸ்தலத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை கையளித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் யாரும் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கேட்கவில்லை.

ஆனால் நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு மூன்று V8 வாகனங்களுக்கு உரிமை உண்டு எனவும் ஆனால் அவ்வாறான ஆடம்பரங்களை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாடிக்கையாளர்களை சுரண்டாமல் வர்த்தகம் செய்யும் கலாசாரம் இந்த நாட்டில் இருக்க வேண்டும் எனவும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் முன்னணி அரசாங்கம் கொண்டு வரும் எனவும் தெரிவித்தார்.