தமிழகத்தில் அயலக தமிழ் விழா இன்று ஆரம்பம்: இலங்கை பிரதிநிதிகளும் பங்கேற்பு

0
525

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ் வெல்லும்’ ‘ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலக தமிழர் விழா சென்னையில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், டுபாய், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் உடப்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அயலக தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து முக்கிய தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர்.

மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்விழாவை தமிழக அரசானது, தமிழக எல்லையைத் தாண்டி பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Oruvan