அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் வீடொன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது அந்த வழியில் சென்ற நபர் ஒருவர் செய்த செயல் அனைவரினாலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
25 வயதான நிகலோஸ் பொஸ்டிக் என்ற நபரே இவ்வாறு பாராட்டப்படுகின்றார்.

இரவில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வீடு ஒன்று தீப்பற்றி எரிவதனை கண்ட பொஸ்டிக் உடனடியாக வீட்டில் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பதனை கண்டறிய வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இதன் போது பொஸ்டிக் வீட்டின் பின் கதவு வழியாக உள்ளே சென்றதாகவும் மேல் மாடியில் ஒன்று முதல் 18 வயது வரையிலான நான்கு சிறுவர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அவர்களை நித்திரையிலிருந்து எழுப்பி பாதுகாப்பான முறையில் வெளியேற்றியுள்ளார்.
இவ்வாறு வெளியேற்றியதன் பின்னர் குறித்த வீட்டில் மற்றுமொரு ஆறு வயது சிறுமி சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எரியும் வீட்டில் தனது உயிரையும் துச்சம் என மதித்து வீட்டிற்குள் மீண்டும் புகுந்து சிறுமியை தேடியுள்ளார்.
சிறுமியை கண்டு பிடித்த போது தீ கட்டுப்பாட்டை இழந்து பரவிக் கொண்டிருந்ததாகவும் வேறு வழியின்றி ஜன்னல் கண்ணாடியை உடைத்து சிறுமியுடன் பொஸ்டிக் மாடியிலிருந்து குதித்துள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது பொஸ்டிக் பல்வேறு காயங்களுக்கு உள்ளாகிய போதிலும் தீப்பற்றிக் கொண்டிருந்த வீட்டில் இருந்த சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளார்.

திரைப்படங்களில் வரும் கற்பனைக் காட்சியைப் போன்று பொஸ்டிக் சிறுவர்களை காப்பாற்றியதனை தீயனைப்புப் படையினரும் பொலிஸாரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது பெற்றோர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொஸ்டிக் ஆறு வயது சிறுமியை தீ விபத்திலிருந்து மீட்டு வரும் காட்சிகள் அடங்கிய காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த காணொளியை பார்த்த பலரும் சமூக ஊடகங்களில் பொஸ்டிக்கை பாராட்டி வருகின்றனர்.