இலங்கையின் முன்னணிப் புலனாய்வு ஊடகவியலாளர்களில் ஒருவரான எம்.எப்.எம்.பஸீருக்கு தொலைபேசியில் உயிரச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனையின் கீழ், பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று (7) அச்சுறுத்தல் விடுக்க பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார் அவரிடம் நீண்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இந்த சம்பவத்தோடு மூன்றாம் தரப்பொன்று தொடர்புபட்டிருப்பது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளில் இந்த அச்சுறுத்தலின் பின்னணியில் ஏதேனும் சதி நடவடிக்கைகள் உள்ளனவா? என அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஊடகவியலாளர் முன்னெடுக்கும் இரு வேறு புலனாய்வு அறிக்கையிடல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார் அதில் ஒரு அறிக்கையிடல் சார்ந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்களை கண்டறிந்துள்ளனர்.
பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான நேரடி தொடர்புகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் அந்த புலனாய்வு அறிக்கையிடல்சார் நடவடிக்கைகளுடன் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை தொடர்புபட்டதா என மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
எவ்வாறாயினும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த நபர் கட்டுபொத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதை ஏற்றுக்கொண்டதாகவும் மூன்றாம் தரப்பொன்றின் தேவைக்காக அதனை செய்ததாக வெளிப்படுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் குறித்த மூன்றாம் தரப்பினை விசாரணை செய்ய தீர்மானித்துள்ள பொலிஸார் அவ்விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அல்லது நபர்கள் அடையாளம் காணப்படும் இடத்து சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என கூறினர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர் நாரம்மலை பகுதியில் வைத்து ஊடகவியலாளரை பின் தொடர்ந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்கள் சார் சிவில் பாதுகாப்பு குழுவொன்றிலும் உப தலைவராக இருந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதி குறித்த சந்தேக நபர் 3 ஆம் தரப்புடன் சேர்த்து விசாரணை செய்யப்படவுள்ளார்.